திமுக அரசை கண்டித்து கோவையில் நடத்தும் போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் திரள வேண்டும் எனவும் நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது7 மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து 9 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் எதுவும் செய்யவில்லை. வெறும் விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடுகின்றது என தெரிவித்தார்.
பத்திரிகைகள் எங்களைதான் இப்போதும் விமர்சிக்கின்றன என தெரிவித்த அவர் அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இப்போது மண் லாரி, மணல் லாரி, கிராவல் எதுவுமே ஓட்ட முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக முதல்வர் அனைத்திற்கும் எங்கள் மீது பழி போடுகின்றார் என தெரிவித்த அவர், அதிமுக குறித்துதான் பத்திரிகைகள், ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றனர் என கூறிய அவர், தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர் குறித்து ஊடகங்கள் ஏன் விவாதம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். ஊடகங்கள் இந்த ஆட்சியில் பயப்படுகின்றனர் என தெரிவித்த அவர், 10 ஆண்டுகளாக காவல் துறை எப்படி இருந்தது. இப்போது அதிமுக மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்கின்றனர் என கூறிய அவர், தமிழக முதல்வர் வரும் போது கூடிய கூட்டத்திற்கு காவல் துறை வழக்கு போடப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். கோவை காவல் துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர், காலம் காலமாக இந்த அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும் போது கூட்டம் இருக்கும் என தெரிவித்த அவர், கமிஷ்னர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் வந்து போராடும் நிலையை காவல் துறை ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவித்தார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்தோம். ஆனால் இந்த அரசு கோவையில் 300 சாலை பணிகளை ரத்து செய்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர், கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிசனில் இருந்தும் 200 பேர் அழைத்து வர வேண்டும் எனவும், ஒரு லட்சம் பேர் திரண்டு கோவையில் நடத்தும் போராட்டத்தால், கோவையில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். ஆட்களை அழைத்து வருவதை கண்காணிக்க கட்சியில் இருந்து குழுக்கள் அமைத்துள்ளோம் என தெரிவித்த அவர்,தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டம் கோவை கூட்டமாக இருக்க வேண்டும், நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். காவல் துறை வழக்கு போட்டால் எதிர்வினையாற்ற தயார் என்ற எச்சரிக்கையினை கோவை காவல் துறைக்கு வைக்கின்றோம் என தெரிவித்த அவர், காவல் துறை நம்மை தடுத்தால் அதை பார்த்துக்கலாம், காவல் துறை தேவையில்லாமல் எங்களை சீண்டாதீர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இந்த செயல் வீரர் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.