அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் அடாவடி செய்து வருகின்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு
சேலம் மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.சேலம் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு விருப்ப மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு விருப்பமனு வழங்கினர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது : "மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது. இருப்பினும், முன்னேற்பாடு செய்யாத காரணத்தால் அங்கங்கே மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக உணவு விநியோகம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியது. மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு அம்மா உணவகம் மூலம் ஏழை எளியோர்க்கும் மலிவு விலையில் உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்தது. அதை முடக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களின் நன்மைக்காகவும் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை திமுக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். 7 பேர் விடுதலை குறித்து கேட்பதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. 7 பேர் விடுதலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அரசு திமுக அரசு. 7 பேர் விடுதலைக்கு அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். உண்மையிலே விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பி இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவு எடுத்திருக்கலாம் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நேர்மையான முறையில் ஆட்சி செய்தது. ஜனநாயக முறையில் செயல்பட்டது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்க வில்லை திமுக அமைச்சர்கள் ஒருமையில் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து பேசிய அவர் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடி செய்து வருவதாக கடுமையாக சாடினார்.