தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த அப்பகுதி மக்கள் போலிஸில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் செல்லும் அடர்ந்த காட்டு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தும் கொள்ளையர்கள் அவர்களிடம் இருக்கும் பணம், மொபைல் போன் ஆகியவற்றை வழிப்பறி செய்வது அப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சூளகிரி காமன்தொட்டி பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் அதே பகுதியில் தான் லாரியில் ஏற்றி வந்த ஜல்லி கற்களை இறக்கிவிட்டு ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காமன்தொட்டி அருகே ஒரு வளைவில் வந்த போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று லாரியை நிறுத்தி டிரைவர் சாந்தகுமாரை தாக்கியுள்ளனர். பின்னர் லாரியில் இருந்த இறங்கி தப்ப முயன்ற டிரைவரை மடக்கி தாங்கள் வைத்திருந்தா பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி ஜல்லி விற்ற பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.அப்போது அவ்வழியாக வந்த அப்பகுதி மக்கள் கொள்ளையர்களை மடிக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர் . போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பகுதியை சேர்ந்த இர்பான், ராகுல், வித்யாசாகர், உமதேஷ் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் சத்ரி எனவும் இவர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த சூளகிரி போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.