சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கத்தால் பல ஆண்டுகளாக கணவனால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதாக மும்பை பெண் ஒருவர் டுவிட்டரில் கதறியுள்ளார். பல முறை புகார் அளித்தும் கணவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் இது தனது கடைசி முயற்சி என்றும் இப்போதும் நீதி கிடைக்காவிட்டால் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இயக்குனர் அசோக் பண்டிட் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் பெண் பல ஆண்டுகளாக தான் கணவனால் சித்திரவதைக்கு ஆளாவதாகக் கண்ணீர் விடுகிறார்.
ஆட்டோமொபைல் தொழில் செய்யும் தன்னுடைய கணவர் குர்ப்ரீத் சிங்கால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாவதாக அந்தப் பெண் கூறுகிறார். தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.