பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான லகான் மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். தனியார் அமைப்பு சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்திய அளவிலான 2 நாள் ஆடைகள் கண்காட்சியை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என பாஜக குற்றம் சுமத்துகிறது. விலை குறைப்பிற்கான லகான் மத்திய அரசின் கையில்தான் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து ஹிட்லர் வாரிசு போல விலை குறைப்பு தொடர்பாக பொய் கூறுகிறார்கள். ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியின் பெருமை திருவள்ளுவர். தமிழ்ப் புலவர்கள் குறித்து பிரதமர் பேசுவது வெறும் வாய் வார்த்தையாக இருக்க கூடாது. இதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் கொடுப்பேன். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக ஆண் குழந்தைகள், ஆசிரியர்கள் , பள்ளியில் உள்ள அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடுதல் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதொடர்பாக ஆசிரியர், பெற்றோருக்கு சொல்லப்பட வேண்டும். எந்த விசயத்திற்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் பெண் குழந்தைகளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதுதான். இந்தியாவிலேயே பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும், புகாரளிக்கும் பெண்களின் விவரத்தை பொதுவில் தெரியாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதும் தமிழகத்தில் மட்டும்தான். நடைபெற உள்ள கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து திமுக சார்பில் ஆலோசித்து வருகிறோம். 750 உயிர்களை பலி கொடுத்துத்தான் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. உழவர்களின் பலம் யாரையும் அடிபணிய வைக்கும். நீட் தேர்வுக்கெதிரான திமுகவின் அழுத்தம் தொடரும். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் பாஜக நீட் தேர்வுக்கு எதிராக எங்களுடன் இணைந்து போராடும். பஞ்சு விலை உயர்வு தொடர்பான ஜவுளி துறையினரின் கோரிக்கை தொடர்பாக சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்’ என்று தெரிவித்தார்