கரூர் அருகே அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த காவல்துறையினர் – கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 மாடுகளையும் பறிமுதல் செய்ததால் பரபரப்பு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கல்பட்டி பகுதி என்கின்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்படுவதாக, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். உடனே காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த நிலையில், போலீசார் வருவதை அறிந்ததையடுத்து, மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 7 மாட்டுவண்டிகளும், பயன்படுத்தப்பட்ட 14 மாடுகளையும் சின்னதாராபுரம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்ததோடு, காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.