கேரளாவில் பெய்து வரும் தொடர் அடைமழையால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவப்படை வெள்ள மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மழை பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேளாவிற்கு கூடுதலாக ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு படைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்டவைகளையும் கூடுதலாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் தேவையான உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.