புதிய தலைவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும், திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவருக்குமான நீண்ட காத்திருப்பிற்குப்பின், இதை எழுத வேண்டியதாய் உணர்ந்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் 8வது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறாள். சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்றாலும் நேற்று முன்தினத்தில் இருந்து உங்கள் கருத்துகளுக்காக காத்திருந்தேன். உங்கள் ட்விட்டர் பக்கங்களுக்கு சென்று தேடிப்பார்த்தால் எந்தப் பதிவும் அந்த சிறுமி தொடர்பாக இல்லை. நீங்கள் நடிகர்கள் மட்டும் என்றால் இப்படி காத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இப்போது நீங்கள் இருவருமே தலைவர்கள். உங்கள் கட்சிகளின் தலைவர்கள். இந்த வன்கொடுமை சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியாத அளவுக்கு நீங்கள் இருவரும் தமிழகத்தை விட்டு தூரமாக இல்லை என்று நம்புகிறேன். அதையும் மீறி இந்த சம்பவம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால்... நீங்கள் அரசியல் செய்ய நினைக்கிற தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் உங்களுக்குமான தொடர்பை நீங்களே பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.