அதிகார வரம்பை மீறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் இருந்து, வைகை விரைவு ரயில் மூலம் வந்தடைந்தார். விருத்தாசலத்தில் கால்களை இழந்த 301 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை ஆளுநர் வழங்கினார்.
அங்கிருந்து கார் மூலம் கடலூர் சுற்றுலா மாளிகை வந்தடைந்தார். இன்று பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தை கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கிறார். பிறகு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் வருகையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மஞ்சக்குப்பம் பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகார வரம்பை மீறி ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், கடலூரில் வந்து குப்பைகள் அகற்றும் பணியை ஆளுநர் பார்வையிடத் தேவையில்லை, தலைமைச் செயலகத்தில் தான் அனைத்து குப்பைகளும் இருக்கின்றன என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆளுநர் கடலூரில் இருந்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக் கொடி காண்பித்து மறியல் போராட்டத்திலும் திமுக, விசிக ஈடுபட்டுள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே திமுக போராட்டத்தால் கடலூர் பேருந்து நிலையத்தில் நடக்க இருந்த தூய்மை இந்தியா திட்டப் பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கைவிட்டார். மாற்று வழியில் வண்டிபாளையம் சென்ற அவர் அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
DMK and VCK cadres stage protest at Cuddalore Manjakuppam road against of Tamilnadu governor Banwarilal Purohit's review in the districct.