ஐடி நிறுவனத்தில் 2 கிரேன்கள் விழுந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ளது zoho என்ற ஐடி நிறுவனம். இது 500 அடி உயரத்தில், 12 மாடி கட்டிடத்துடன் பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இப்போது, 13வது தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியில் 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இன்று மதியம், திடீரென ராட்சத கிரேன்கள் இரண்டும் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
கிரேன் அங்கு நின்ற ஒரு வேன் மீது விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஐடி ஊழியர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு கிரேன், நிறுவனத்தின் 7வது மாடி கட்டிடதின் பக்கவாட்டில் விழுந்தது.
இதனால் அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய ஐடி ஊழியர்கள் பலரும் அச்சத்தினால் வேகமாக அலறியடித்து வெளியேறினர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அதேநேரம், பத்திரிகையாளர்களை கட்டிட எல்லைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.]