பணப்பட்டுவாடா புகார் வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதை விட்டு தேர்தலை நிறுத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பணப்பட்டுவாடா புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக தேர்தலை நிறுத்தி வைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஏப்ரல் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து ஆர்.கே.நகர் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கள நிலவரத்தை பதிவு செய்துள்ளது தமிழ் ஒன் இந்தியா.
அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறியதாவது : ஆர்கே நகர்த் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கமாக தேர்தல் முடிந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஒரு மாதத்திற்கு மேலாகி விடும். ஆனால் இந்த இடைத்தேர்தல் 24 நாட்களுக்குள் அனைத்தும் முடிந்துவிடும் என்பது வாக்காளர்களுக்கு நல்ல விஷயம்.
தேர்தல் அறிவித்துவிட்டு நிறுத்தப்படுவதால் மத்திய அரசின் பணம் விரயமாகிறது, இது நடைபெறாமல் இந்த முறை நல்ல முறையில் தேர்தல் நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா புகார் வந்தால் ஆணையம் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர உடனடியாக தேர்தலை ரத்து செய்துவிடக் கூடாது என்றார்.
இந்தத் தொகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர் தேர்தல் குறித்து தெரிவித்ததாவது : ஆர்.கே நகர் தொகுதிக்கான பிரதிநிதியை இப்போதே தேர்ந்தெடுக்க வேண்டும். அரசின் நிதி தொகுதி மக்களுக்கு கிடைக்காமல் மக்களின் பல திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன. ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பகுதியில் இருக்கும் ஹவுசிங் போர்டு பிரச்னை, சென்னியம்மன் கோவில் மற்றும் அரசு கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரிப் பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று கூறினார்.
Chennai Radhakrishnan Nagar people happy about the election announcement as their constituency is left vacant for over 11 months and the welfare schemes and funds were not properly alloted for their constituency development.