கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மீது இயக்குநரும், நடிகருமான சசிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். தனது அத்தை மகனும், தயாரிப்பு நிறுவனத்தை மேற்பார்வை பார்த்து வந்தவருமான அசோக் குமார் தற்கொலைக்கு அன்பு செழியனே காரணம் என்று அவர் கூறியிருந்தார். அந்த புகாரில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில், அன்பு செழியன் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய அத்தை மகன் அசோக்குமார், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் குடியிருந்துவருகிறார். என்னுடன் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்துவந்தார்.
நாங்கள் தற்போது, 'கொடிவீரன்' என்ற திரைப் படத்தை தயாரித்து வரும் 30ம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'தாரை தப்பட்டை' என்ற படத்தை வெளியிட்டோம். அதற்கு சென்னை தி.நகர், ராகவா சாலையில் வசிக்கும் பைனான்ஸியர் மதுரை அன்புச்செழியனிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்தோம். அதற்கான வட்டியையும் செலுத்தி வந்தோம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது கொடிவீரன் படத்தினை வெளியீடு செய்வதற்காக வேலை நடந்து கொண்டிருந்தது.
ஆனால் அன்புச்செழியன் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினை அசல் மற்றும் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால் கொடி வீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என்று கடுமையாக நெருக்கடி கொடுத்து வந்தார். நான் எனது அடுத்த படவேலையில் இருந்ததால் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக்குமார் மேற்கண்ட கடன் பிரச்னையைக் கையாண்டு வந்தார்.
Do you know what are the charges Sasikumar made against Anbuchezhiyan? here is the detail.