சசிகுமார் மேனேஜர் அசோக்குமார் தற்கொலையைத் தொடர்ந்து கந்துவட்டி கொடுமைக்கு விரைவில் முடிவு காண்போம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
மதுரை அன்பு செழியனின் கந்து வட்டி கொடுமையால் நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் மேனேஜர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில் மதுரை அன்புச் செழியனின் கந்துவட்டி கொடுமையை விவரித்திருந்தார்.
இதையடுத்து அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கந்து வட்டி கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை.இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை: கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.
President of the Producers Council Vishal's statement on the Usury menace.