சென்னை வரும் மத்திய குழுவினர் வரும் 24ஆம்தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வெள்ளப்பகுதிகளை பார்வையிடுவதற்காக வரும் 21ம்தேதி மத்திய. குழுவினர், தமிழகம் வருகிறார்கள். 22,23ஆகிய இரண்டு நாட்கள் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள், முதல் நாளில் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மற்றொரு குழுவினர்,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களையும் பார்வையிடுகின்றனர். 23 ம்தேதி, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களையும் பார்வையிடுகின்றனர். அதே நாளில் இன்னொரு குழு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சேத மதிப்பீட்டை கணக்கிடுகின்றனர், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் எம்பிக்கள், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் சேத விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறோம். இக்குழுவினர் வரும் 24ஆம்தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்கள். ஏற்கனவே திமுக பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 2 ஆயிரத்து 629 கோடி நிவாரண உதவியாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கியுள்ளார். அது முதற்கட்ட கோரிக்கை. இப்போது மேலும் அதிகளவில் மழை பெய்திருக்கிறது. கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் மழையினால் கூடுதல் சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான அறிக்கை வந்து கொண்டிருக்கிறது. எனவே ஏற்கனவே கேட்ட நிவாரணத்தை விட ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதி கேட்போம்” என்று அவர் தெரிவித்தார்.