45 நாட்களில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்க முயன்றவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாலிபரிடம் பணம் பெற்று கொண்டு தப்பிக்க சென்றவரை மறைந்து இருந்த போலீசார், ஏமாற்று பேர் வழியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. 12 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் அரசு வேலையில் சேருவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாலிபர் பாலசுப்பிரமணியத்தை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 2.50 லட்சம் ரூபாய் பணம் செலவாகும் என்றும் பணம் செலுத்திய 45 நாட்களுக்குள் வேலை கிடைக்கும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிச்சயம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி உறுதி அளித்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரடியாக சந்திப்பதாகவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாலசுப்பிரமணியமும், அவரது உறவினரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வந்தபோது அவர்களை சந்தித்த அந்த மர்ம நபர் மின்சார வாரியத்தில் நிச்சயம் வேலை வாங்கித் தருவதாக கூறி முதல் கட்டமாக 58 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணியத்தின் உறவினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, மறைந்திருந்த காவல்துறையினர் அந்த மர்ம நபர், வாலிபரிடம் பணம் பேரம் பேசுவதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இறுதியாக பணம் கேட்டு வற்புறுத்தியபோது மறைந்திருந்த காவல்துறையினர் மர்ம நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மர்மநபர் பெயர் கார்த்தி என்பதும் அவர் சேலம் மாநகரம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பாலசுப்ரமணியத்தை போன்று பலரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டு உள்ளதும், இவருடன் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.