பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் விநாயகர் சதுர்த்தியான இன்று தண்டோரா உடன் தடுப்பூசியை கையில் ஏந்தி விருதுநகர் வீதிகளில் விநாயகர் வேடமணிந்து ஒருவர் நடந்து சென்றது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி மட்டுமே எனவும் பொதுமக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இளைஞர் ஒருவர் விநாயகர் வேடமணிந்து கொரோணா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தண்டோரா போடுபவர் விளக்கி பேசி முன் செல்ல காகித தடுப்பூசியை கையில் ஏந்திய விநாயகர் (வேடமணிந்தவர்) பின் சென்றார். மேலும் கையில் கதையுடன் உள்ள விநாயகரை தான் காலம் காலமாக பார்த்து வந்துள்ளோம். காகித தடுப்பூசியை கையில் ஏந்திய விநாயகரை விருதுநகர் வீதிகளில் விநாயகர் சதுர்த்தியான இன்று பார்க்க முடிந்தது. பொது மக்களுக்கு ஆசி வழங்கும் விநாயகரை மட்டுமே இதுவரை பார்த்திருந்த பொது மக்கள் தடுப்பூசி செலுத்த சொல்லி அறிவுரை வழங்கிய விநாயகரை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே கடந்து சென்றனர்.