நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 29 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகைப்பூ செடி வளர்ப்பில் தொடங்கியிருக்கிறது இவர்களின் மாடித்தோட்ட ஆர்வம். பின்னர், தற்போது வசிக்கும் வீட்டில் ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டம், நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் மினி சோலையாகக் காட்சியளிக்கிறது.
வீட்டுச் சமையலுக்கான பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். அடர்நடவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், மகரந்தச்சேர்க்கைக்காக தேனீ வளர்ப்பையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்பவர்கள், வீட்டுச் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் சில மரங்களை வளர்க்கின்றனர்.