ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பெருமளவு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ள இப்பகுதியில் இத்திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு, லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக விடுதலை சிறுத்தைகள் திராவிடர் கழகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற சைக்கிள் பேரணி திருக்காரவாசலில் தொடங்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்தப் பேரணியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது .
Cycle rally condemning the opening of the Sterlite plant