எங்கு பார்த்தாலும் காக்கி சட்டைகளின் தலைகள்.. போலீசாரின் பூட்ஸ் எழும்பும் ஓசைகள்.. ஆங்காங்கே தரைகளில் லத்திகளை தட்டும் சத்தங்களை கேட்டு மிரண்டு போயுள்ளனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். என்ன தவறு செய்துவிட்டோம், ஏன் இந்த நிலை என்று தெரியாமல் விட்டத்தை பார்த்து 4 நாட்களாக பசி, பட்டினியுடன் பொழுதை கழிக்கும் அவலத்தில் உழன்று வருகின்றனர். பெரியவர்களுக்கு நடந்தவைகளின் விவரங்கள் தெரியும் என்றாலும், நோயாளிகளும், சிறுவர், சிறுமியர்கள், கைக்குழந்தைகளும் இந்த அவலத்தின் பிடியில் சிக்கி வருகின்றனர். ஒரு பக்கம் இயல்பு நிலை திரும்புகிறது என்று மாவட்ட ஆட்சியர் பேட்டி அளிக்கிறார். மற்றொரு புறம் ஆளில்லா விமானம் மூலம் கலவர பகுதி கண்காணிக்கப்படுகிறது என்ற தகவல்கள் வந்தடைகின்றன. மாவட்டத்தின் நிலவரம் உண்மையிலேயே என்ன என்பது குறித்து அறிய களத்திலேயே நேரிடியாக சில பகுதிகளில் பயணிக்க நேர்ந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பொதுமக்கள் அனைவரும் கூறிய ஒட்டுமொத்த கருத்தின் சாராம்சம்.. "போலீசார் மாவட்டத்தை விட்டு வெளியேறினால்தான் இயல்புநிலையே திரும்பும்" என்று பயம் கலந்த வார்த்தைகளுடன் ஒரே மூச்சாக பேசி முடித்தார்கள். இதோ அவர்கள் தெறித்த பீதி வார்த்தைகள் உங்களுக்காக