விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் கூவாகமாக சென்னை மொபினா தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த மாதம் 17 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் வந்துள்ளனர்.
இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் Ôமிஸ் கூவாகம்Õ அழகிப்போட்டி நடைபெற்றது.
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவி ராதாம்மாள் வரவேற்றார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர்.
முதல்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் குத்தாட்டம் ஆடினார்கள்.
அதனை தொடர்ந்து, Ôமிஸ் கூவாகம்Õ அழகிப்போட்டி நடந்தது. இதில் சென்னை, விழுப்புரம், ராஜபாளையம், நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நாகப்பட்டினம், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 44 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மதியம் வரை நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 25 பேர் 2 ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாலை விழுப்புரம் நகராட்சி திடலில் 2 ஆம் சுற்றுக்கான அழகிப்போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் சினேகன், திரைப்பட நடிகர்கள் சுரேஷ், விமல், தீபக், வெங்கட், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதன் பின்னர் 2 வது சுற்று அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 25 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 15 பேர் 3 ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 15 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மொபினா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை போரூர் ப்ரீத்தி 2 ஆம் இடத்தையும், ஈரோடு சுபஸ்ரீ 3 ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
des : The beauty of the transgender was held in Villupuram. Miss Mokina was selected by Miss Mobina.