வயதான தம்பதியினரை கொலை செய்து விட்டு கொள்ளை அடிக்கும் திட்டத்தில் இருந்த பிரபல ரவுடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்
மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றங்கள் நடப்பதை தடுக்க வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான குழு கண்காணித்து வந்தது இந்நிலையில் நேற்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்கள் மற்றும் அந்த மோட்டார்சைக்கிள்களின் நம்பரை வைத்து விசாரணை செய்ததில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கவாஸ்கர் என்ற குரு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனது செல்போன் என்னை வாங்கி அதன் டவர் லொகேசன் மூலம் பின் தொடர்ந்தனர். இதில் மணலி ராகவன் தெருவில் செல்போன் இணைப்பு டவர் காட்டியதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீட்டில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் செல்ல தயாராக இருப்பதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரைக்கண்டதும் அந்த நபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக உள்ள வயதான தம்பதியினரை கொலை செய்து விட்டு கொள்ளை அடிக்கும் சம்பவத்திற்கு தயாராகி இருப்பதும் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்தும் பயங்கர ஆயுதங்கள், 14பவுன் நகைகள், 1 கார், 1மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உரிய நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வயதான தம்பதியை கொலை செய்ய ரவுடி கும்பல் திட்டம் தீட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.