சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் துணிகள் வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே சென்னை சில்க்ஸ் துணிக்கடை, ஸ்ரீகுமரன் ஜூவல்லரி கடைகள் உள்ளன. இந்த கடைகளின் தரைத்தளத்தில் உணவகம் உள்ளது. இரவு வழக்கம்போல் கடையில் துணிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.இந்த நிலையில் இங்குள்ள உணவகத்தில் இருந்து வெளியேறும் புகையை கொண்டு செல்லக்கூடிய பைப்லைனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடத்தில் நெருப்புடன் புகை கிளம்பியது.இந்த புகை மேலே இருந்த துணிக்கடையின் 2, 3, 4&வது தளங்களுக்கும் பரவியது. இதனால் துணிக்கடையின் வெளிப்பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலமாக காட்சியளித்தது.இதை பார்த்ததும் கடைக்கு துணிகள் வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் கடையின் ஷட்டர் கதவை பூட்டிக்கொண்டு பணியாளர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர் இதனால் துணிக்கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் சேதமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியது.ஏற்கனவே கடந்த வருடம் சென்னை தீ நகரில் இருந்த தீ சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையானது .இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது