பிரபல தொலைக்காட்சி சீரியலின் தயாரிப்பு மேற்பார்வையாளர் அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான இஷ்க்பாஸின் தயாரிப்பு மேற்பார்வை பணியை கவனித்து வந்தவர் சஞ்சய் பைரகி. அவர் கடந்த 2ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் பைரகி மும்பை மலாத் பகுதியில் உள்ள சிலிகன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, 10 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு 16வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு சஞ்சய் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சய். சஞ்சய் பற்றி இஷ்க்பாஸ் சீரியலின் தயாரிப்பாளரான குல் கான் கூறியதாவது, சஞ்சய் திறமையானவர். மொத்த தயாரிப்பு வேலையையும் கவனித்து வந்தார். அவரை பிணமாக பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.