ராமேஸ்வரம்: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அமர்ந்திருந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரருக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் உள்ள சங்கர மடத்துக்குள் உள்ளே நுழைந்து தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விஜயேந்திரர், எச்.ராஜா, சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, மேடையில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவருமே எழுந்து நின்றனர். ஆனால் காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் மட்டும் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
விஜயேந்திரரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் நாளிதழ்களிலும், சமூக வலைதளத்திலும் பரவியதால், விஜயேந்தரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். மேலும் தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.