சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது. குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த போது 2005-ம் ஆண்டு சோராபுதீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என குற்றம்சாட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் அமித்ஷாவின் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் நேற்று ஆஜராகினர். மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக துஷ்யந்த் தவே ஆஜரானார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். இது தொடர்பான ஆவணங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.