பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருவது அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதை ஒடுக்க போலீஸ் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அணு உலை, விவசாயிகள் போராட்டம், ஜல்லி கட்டு உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தாமாக வந்து போராட்டம் நடத்தியதால் அவற்றின் தடையும், பிரச்சனையும் முடிந்தது. இந்நிலையில் பஸ் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நெல்லை மாணவர்கள் போராட்டம் நடத்த ஆயத்தம் ஆகி வருகின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் நெல்லைக்கு வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு எஸ்எப்எஸ் பஸ் கட்டணம் 40 ரூபாயிலிருந்து ரூ.60 ஆகவும், தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரூ.35லிருந்து ரூ.55 ஆகவும் சுரண்டையிலிருந்து நெல்லைக்கு ரூ.33லிருந்து 47 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.