ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் காணாமல் போன 11 வயது தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மோசமான நிலையில் உடல் சிதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா ஜிந்து மாவட்டத்தில் காணாமல் போனதாக கருதப்பட்ட 11 வயது தலித் சிறுமி கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று பிணமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். "இந்த சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவில்லை. குறைந்தது 2 பேராவது கூட்டாக பலாத்காரம் செய்திருக்கவேண்டும். கடினமான பொருளை அவளது பெண்ணுறுப்புக்குள் நுழைத்துள்ளார்கள். அவளது கல்லீரல் சேதமடைந்துள்ளது" என்கிறார் உடல் பரிசோதனை செய்த டாக்டர் எஸ்.கே டாட்டர்வால்.
குருசேத்ராவைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஜனவரி 9 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று குடும்பத்தார் தேடிவந்தனர். கடந்த வெள்ளிகிழமையன்று மீட்கப்பட்ட உடலில் மேலாடை மட்டும் இருந்துள்ளது. முகம், கழுத்து, உதடு, மார்பு பகுதி என சிறுமியின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததும் தெரியவந்துள்ளது. "காயங்களைப்பார்க்கும் போது பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தது உறுதியாகிறது" என்கிறார் அந்த மருத்துவர்.