பொங்கல் பண்டிகை அன்று ஆறு தமிழ்ப் படங்கள் ரீலீஸ் என அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதில் வியாபார முக்கியத்துவம் உள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே படத்தயாரிப்புகளுக்காக வாங்கியுள்ள கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதால் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தானா சேர்ந்த கூட்டத்திற்கு தடை போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு விநியோக உரிமையை திருச்சி பரதன் பிலிம்ஸ் வாங்கி உள்ளனர். ரிலீசுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் படத்தின் ஏரியா வியாபாரம் முடிக்கப்படாமல் இழுவையில் உள்ளது.
சுமார் 37 கோடிக்கு தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி உள்ள பரதன் பிலிம்ஸ் ஏரியா அடிப்படையில் 55 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அது மிக அதிகம் என்பதால், கடைசியில் 43 கோடியாகக் குறைக்கப்பட்டது. ஏற்கனவே சூர்யா நடித்து வந்த படங்கள் தோல்வியடைந்ததால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை அதிக விலை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. விநியோகஸ்தர் கூட்டமைப்புடன் ஞானவேல்ராஜா தரப்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் பாக்கியுள்ள கடன் தொகையை மூன்று தவணைகளாக திருப்பித் தர கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளித்துள்ள விநியோகஸ்தர் கூட்டமைப்பு தானா சேர்ந்த கூட்டம் ரீலீசுக்கு முன்பு முதல் தவணையாக 15 கோடியை செலுத்தச் சொல்லியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 400 தியேட்டர்களுக்கும் அதிகமாக இப்படம் திரையிடப்படக் கூடும் என தெரிகிறது.
Due to financial issues Surya's Thaana Serntha Koottam is facing trouble in release.