நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்ததாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முன்னர் அரசியலுக்கு வரமாட்டோம் என்று அனைவருமே உறுதியேற்றுக் கொண்டதாகவும் பொன்வண்ணன் கூறியுள்ளார்.
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பொன்வண்ணன் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : 2014ல் நடிகர் சங்கத் தேர்தலுக்கான பணிகளை தொடக்கினோம். அப்போது முதல் 2015ல் தேர்தல் நடைபெறும் வரை எங்களின் முக்கிய ஆலோசனையாக இருந்தது. நடிகர் சங்க பொறுப்பு என்பது அதன் வளர்ச்சிக்காக மட்டுமே இருக்க வேண்டும், இதை பயன்படுத்தி தனி நபர் லாபம் தேடக் கூடாது என்பதே.
நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு, உறுப்பினர்களை சந்தித்து வாக்கு கேட்ட போதும் கூட அரசியல் சார்பு இல்லாமல் நாங்கள் செயல்படுவோம் என்று தான் உறுதியளித்திருந்தோம். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் நான், பொருளாளர் கார்த்தி என நாங்கள் 4 பேரும் சங்க பொறுப்பை ஏற்கும் போது அரசியலற்ற முறையிலேயே செயல்பட வேண்டும் என்று உறுதியேற்றோம்.