ஆசையைக் காத்துல தூதுவிட்டு...' என்னும் பாடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அந்தப் பாடலின் கொட்டொலியைக் கேட்டுவிட்டால் அதைப் பார்க்காமல் கடந்துபோக முடியாது. அமர்ந்து பாடற்காட்சியில் மனஞ்செலுத்தினேன். உதட்டசைவே இல்லாமல் மோகப்பார்வை பார்த்துக்கொண்டே நாயகி ஆட. இரஜினிகாந்தின் முகபாவனை காட்டப்படுகிறது. பெண்மோகத்தால் வீழ்த்தப்படாத, நெடுந்தூரம் ஓடிய களைப்பு தெரிகின்ற, எதிலும் பட்டும் படாத போக்குடைய, இறுக்கமோ வெறுப்போ தெரியாத, யாவுமறிந்ததுபோல் கண்விழி மேல்செருகிய மெய்ப்பாடு ஒன்றை அவரிடம் காண முடிந்தது. பாடலில் அந்தப் பாவனையுடன் பத்திருபது சுடுவுகளுக்கு மேல் அவர் காட்டப்படுகிறார். எந்தச் சுடுவிலும் அந்தப் பார்வையோ முகக்குறியோ மாறவில்லை. தேர்ச்சியான நடிகரிடம் மட்டுமே வெளிப்படும் அட்டகாசமான முகபாவனை அது. அந்தப் பாடல் நாயகிக்கானது. பத்திருபது தோழியர் புடைசூழ ஆடப்படுவது. இரஜினிகாந்துக்கு அப்பாடலில் எந்தப் பங்கேற்பும் இல்லை. ஆனால் அந்தப் பாடலில் அவர் உருவாக்கித்தரும் மனநிலைதான் பார்வையாளனை நிரப்பும். இதுதான் இரஜனிகாந்த் தம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட இடம்.
நல்ல நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் பாலசந்தர்க்குத் தீராத ஆர்வமுண்டு. அதற்கு நேர் எதிரான அழுகதைப் படங்களிலும் விற்பன்னர். சோகப்படமொன்றில் உடல் தளர்ந்த வேடத்தில் அறிமுகமான இரஜினிகாந்த், அவ்வறிமுகத்திற்கு முற்றிலும் எதிரான நாயக வேடங்களில் திறமை காட்டி உயர்நட்சத்திரமானது எப்படி ? முழுக்க முழுக்க அவருடைய நடிப்பாற்றலால்தான். இங்கே நன்கு நடித்திருக்கிறார் என்று அடையாளம் காணத்தக்கவாறு பிற நடிகர்கள் நடித்திருப்பார்கள். இவ்விடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று நாம் உணரவே முடியாதவாறு நம்மை ஒன்றச் செய்துவிடுபவர் இரஜினிகாந்த்.
A special Video for Rajinikanth on his birthday.