ஒகி புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது லட்சத்தீவு அருகே கரை ஒதுங்கிய 45 தமிழக மீனவர்கள் கொச்சி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். வங்கக்கடலில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் மாயமானர். ஒரு சிலர் அருகில் உள்ள கடல்பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில், பலரது நிலைமை என்னவென்று முழுவதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஓகி புயல் நேரத்தில் திசை மாறி லட்சத்தீவின் கரெட்டி பகுதியில் சுமார் 45 தமிழக மீனவர்கள் கரை ஒதுங்கினர். இவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு லட்சதத்தீவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கப்பலில் வந்திறங்கிய மீனவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர், தமிழக ஐ.ஏ.எஸ்.,அதிகாரி மீனவர்களுக்கான உணவுச்செலவுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.