கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையில் மீனவர்களை கண்டுபிடித்துத் தர கோரி 2 மணி நேரத்துக்கு மேலாக மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஓகி புயலில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களை கண்டுபிடித்து தரக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு தங்களை சந்திக்கவில்லை என்றும் இதுவரை மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி கன்னியாகுமரியில் 8 கிராம மக்கள் குழித்துறையில் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக 5000-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே போராட்டக்காரர்களிடம் நெல்லை சரக டிஐஜி கபில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபாலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.