ஓகி புயல் காரணமாக கனமழை மற்றும் பலத்த காற்றால் குமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதி தனித்தீவாகியுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை என்ற இடத்தில் தாழ்வான பாலம் ஒன்று உள்ளது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு இடுப்பளவிற்கு தண்ணீர்அடித்துச் சென்றதால் அந்தத் தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு அருகில் 3 வாகனங்கள் தண்ணீரியில் மூழ்கிய நிலையில் நிற்கின்றன. இதனால் நாகர்கோவில் கன்னியாகுமரி இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின்தடை உள்ள நிலையில், சுசீந்திரம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் இருளில் சிக்கித் தவித்த பெண்கள், கைக்குழந்தையுடன் படகுகள் மூலம் வெளியே அழைத்து வரப்பட்டனர். எனினும் சுசீந்திரம் பகுதியில் உள்புறப் பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரமின்றி தண்ணீர் சூழ உதவிக்கு யாரும் இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.