கார்டன் முதல் கோடநாடு வரை அதிர வைத்த ஐ.டி. ரெய்டு

Maalaimalar 2017-11-10

Views 4

சசிகலா, தினகரன், நடராஜன், திவாகரன் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க செய்யும் அதிரடி நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்தது. இன்று அதிகாலை முதல் அவர்கள் அனைவரது வீடுகளிலும் வருமான வரி சோதனை வேட்டை நடந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது. சென்னை, தஞ்சை, மன்னார்குடி, கூட லூர், கொடநாடு, அறந்தாங்கி உள்பட பல இடங்களில் சோதனை நடக்கிறது.

சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், ஈக்காடு தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் டாக்டர் கிருஷ்ணப்பிரியா வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சையில் தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு, கூடலூரில் சசிகலாவின் ஆதரவாளரான மர வியாபாரி ஒருவரின் வீடு, கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட், கோவை, அவினாசியில் சசிகலா ஆதரவாளர்கள் வீடு, சேலத்தில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு, பெங்களூரில் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி வீடு, தஞ்சை அருளானந்தம் நகரில் சசிகலா கணவர் நடராஜன் வீடு, திருச்சியில் இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடக்கிறது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்களுக்கு சொந்தமாக 10-க் கும் மேற்பட்ட தொழில் குழுமங்கள் உள்ளன. இந்த தொழில் குழுமங்கள் மூலம் ஏராளமான போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே வரி ஏய்ப்பை முழுமையாக கண்டுபிடிக்க 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை தொடங்கி விட்டனர். “ஆபரே‌ஷன் கிளீன் மணி” (கருப்புப் பணம் ஒழிப்பு) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனைக்காகவே தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருமான வரித்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மொத்தம் சோதனை நடந்த 187 இடங்களில் பெரும்பாலான இடங்களில் சோதனை சில மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. மற்ற இடங்களில் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளில் ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா? என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

கருப்புப் பணத்தை மீட்க நடந்த அதிரடி வேட்டை என்பதால் சசிகலா குடும்ப உறவுகள், நட்பு வட்டாரங்கள் யாரும் இன்றைய சோதனையில் தப்பவில்லை. இந்த அதிரடி வேட்டையில் என்னென்ன கிடைத்தது என்பது இன்றிரவு அல்லது நாளை தெரிய வரும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு இந்த வருமான வரித்துறை சோதனை மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS